வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் திருவிழாவில் சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் உரிய முறையில் பின்பற்றி கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து சமூகத்தை காப்பாற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுக்கொண்டார்.
வடமாகாண மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடலொன்று வட மாகாண ஆளுநர்.பீ.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நேற்று சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் ஆளுநரின் செயலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆளுநர் தெரிவித்ததாவது,
கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக தற்காலிகமாக மூடப்பட்ட நிலையிலுள்ள பாடசாலை ஒன்றினை அடையாளம் கண்டு அதனை மறுவாழ்வு மையமாக மாற்றலாம்.
போதைப்பொருள் வைத்திருப்பவர்களைப் கைது செய்தால் அவர்களை மறுவாழ்வு மையத்திடம் கையளிப்பது தொடர்பிலுள்ள சட்ட ரீதியான பிரச்சினைகளைப் பற்றிய அறிக்கையை தாமதமின்றி தயாரித்து என்னிடத்தில் கையளியுங்கள்.
அவ்விடயங்கள் தொடர்பாக நான் அமைச்சரவை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கின்;றேன். போதைப் பழக்கத்திலிருந்து இளைய சமுதாயத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்கானதொரு சிறப்புப் படை ஏற்படுத்தலாம்.
நல்லூர் திருவிழாவில் நாடளவில் அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் உரிய முறையில் கடைபிடித்து கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து சமூகத்தை காப்பாற்றவேண்டிய நடைமுறைகளைச் மேற்கொள்ள வேண்டும்.
நேர அட்டவணை தயார் செய்து அதனடிப்படையில் பூஜைகளை நடத்தலாம். நமது மாகாணக் கோவில்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதை நான் விரும்பவில்லை.
தேவைப்பட்டால் பொலிஸ் உதவியை நாடுங்கள். மக்களைக் காப்பதற்கான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளுங்கள் என்றார்.