சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான முழு விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி தாக்கல் செய்தது.
சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. கடந்த முறை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி தரப்பில் முழுமையான விசாரணை அறிக்கையையும், சிபிஐ தரப்பில் இடைக்கால விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியனும், சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் சார்பில், வழக்கு தொடர்பான முழு விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர். தற்போது இவ்வழக்கு விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், சிபிஐ தரப்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது.
இதனை கருத்தில் கொண்ட நீதிபதிகள், சிபிஐக்கு இரண்டு வார காலம் அவகாசம் அளித்ததுடன், சீலிடப்பட்ட கவரில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.



















