கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள எல் ஜூலியா நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் எரிவாயு கசிவு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் இறங்கினர்.
எனினும் தொழிலாளர்கள் 6 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 3 தொழிலாளர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் இதே எல் ஜூலியா நகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.