தனியார் வகுப்பிற்கு வந்த சிறுவர்களை சீரழித்து, புகைப்படம் எடுத்த ஆங்கில ஆசிரியர் குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவரிடமிருந்த காணாமல் போன ஒரு பென் ட்ரைவ் மூலமே அவர் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிசார் ஆசாமியை மடக்கிப்பிடித்தனர்.
54 வயதான நிரந்த எதிரிசிங்க என்பவரே கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சியில் சிறுவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், வீட்டில் ஆங்கில பாடத்தை கற்பித்து வந்துள்ளார்.
ரியாலிட்டி நிகழ்ச்சியில் அறிமுகமான சிறுவர்களை, வீட்டில் ஆங்கில பாடம் கற்பிக்கும் சாக்கில் அழைத்துள்ளார்.
சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து, அவர்கள் மூலம் ஆபாச வீடியோக்களை உருவாக்கி, வெளிநாடுகளிற்கு விற்பனை செய்து வந்துள்ளார். பலரை பாடசாலை சீருடைகளுடனேயே ஆபாச காட்சிகளில் ஈடுபடுத்தியுள்ளார்.
அவரிடமிருந்த பென் ட்ரைவ் ஒன்று காணாமல் போனது. பின்னர் அதிலிருந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த வீடியோக்களை, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
135 சி.டி.க்கள், பென் டிரைவ்கள், ஹார்ட் டிஸ்க்குகள், மெமரி கார்டுகள், கமராக்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற உபகரணங்கள் பன்னிபிட்டியில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அரசு ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சுமார் இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர். சிறுவர்களின் 200 புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டன.
துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள் அனைவரும் 10-12 வயதிற்குட்பட்டவர்கள்.
இதையடுத்தே ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தடைசெய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.