தமிழகத்தில் இலங்கை தாதாவின் உடலை எரித்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் புகார் செய்தார்.
இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது. இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
பெங்களூருவில் மறைந்திருந்த இவர், கோவைக்கு கடந்த மார்ச் மாதம் வந்துள்ளார்.
கோவை சேரன் மாநகரில் வீடு எடுத்து, தனது காதலி அமானி தான்ஜி உடன் தங்கியுள்ளார். மேலும், அங்கொட லொக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோரின் உண்மையான பெயர் மற்றும் குடியுரிமையை மறைத்து, ஆதார் அட்டை பெற போலி ஆவணங்களை வழங்கியுள்ளதும் தெரியவந்தது. இதற்கு சிவகாமி சுந்தரி மற்றும் ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகிய இருவர் உதவி செய்தது தெரிந்தது. ஆதார் பெரும் முன், அங்கொட லொக்கா உயிரிழந்துள்ளார்.
அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிவகாமசுந்தரி, அமானி தாஞ்சி(27) ஆகியோரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
இதேபோல், இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஈரோடு இந்திரா நகரை சேர்ந்த தியானேஸ்வரன்(32) என்பவரையும் கைது செய்தனர்.
அவர்கள் தாதாவை எப்படி கொன்றார்கள் என்று விசாரணை நடத்திவருகின்றனர்.
உயிரிழந்த அங்கொட லக்காவின் பிரேதப்பரிசோதனை நிறைவடைந்த நிலையில், அவரின் காயச்சான்றை பெற, பொலிசார் முயற்சித்து வருகின்றனர். உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததாக காயச்சான்றிதழில் தெரிவிக்கப்பட்டால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.