கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கடத்திச் சென்றபோது, மடக்கிப்பிடிக்கப்பட்ட பூனை, தப்பிச் சென்றுள்ளது.
பிடிக்கப்பட்ட பூனையை மேலதிக விசாரணைக்காக பொரளை பொலிசாரிடம் ஒப்படைக்கவிருந்தபோதும், பொலிசார் அதை பொறுப்பேற்க தாமதமாகியிருந்த நிலையில், பூனை தப்பியோடியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன இன்று இதனை தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி பேஸ்லைன் வீதிப்பகுதியில் உள்ள மகசீன் சிறைச்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பூனை பிடிக்கப்பட்டது. அதன் கழுத்தில் 1.7 கிராம் ஹெரோயின், சிம் கார்ட், மெமரி கார்ட் என்பன பொதி செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்தன.


















