நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதித்துவமும் கிடைக்காத நிலையில் அம் மாவட்டத்துக்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் அவசியம் என்ற அடிப்படையிலேயே கலையரசனுக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஞாயிற்றுக்கிழமை மாலை தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் விளக்கமளித்திருந்தார்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு தவராசா கலையரசன் நியமிக்கப்பட்ட நிலையில் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள தேசிய பட்டியில் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து அந் நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 09 ஆசனங்களையே பெற்றிருந்தது.
இதனையடுத்து விகிதாசார அடிப்படையில் அக் கட்சிக்கு மேலதிகமாக தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்று வழங்கப்பட்டது.
இந்நிலையில் இத் தேசிய பட்டியல் ஆசனத்தை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தமக்கு வழங்குமாறு கூட்டமைப்பின் தலைவரிடம் கோரியிருந்தார்.
அதேபோன்று தேசியப்பட்டியல் ஆசனம் தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் சட்டத்தரணி தவராசாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இத்தகைய பின்னணியிலேயே இத் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டார்.
எனினும் குறித்த நியமனம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்குள் தொடர்ந்தும் சர்ச்சை நிலவியிருந்தது.
தேசியப்பட்டியல் ஆசனத்தை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கே வழங்க வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழரசு கட்சி கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந் நியமனம் தொடர்பாக கட்சியுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படாமல் கட்சியின் செயலாளர் செயற்பட்டமை தவறான விடயம் என்ற அடிப்படையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று தேசிய பட்டியல் ஆசனம் மாவை சேனாதிராசாவிற்கே வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான சித்தார்த்தன் தெரிவித்திருந்தார்.
இத்தகைய பின்னணியிலேயே தேசியப் பட்டியலுக்காக நியமிக்கப்பட்ட கலையரசனது நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.



















