யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே 15 ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பங் கோரப்பட்டிருந்தது. அதற்கமையக் கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் ஒன்று – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ந. தனேந்திரனுடையது. உரிய முறைப்படி நிரப்பப்படாத காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி, மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர் எஸ். ரவிராஜ், விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன் ஆகியோரின் விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆறு பேரிலிருந்து ஐந்து பேரைத் தெரிவு செய்வதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவருடன், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பேரவையினால் முன்மொழியப்பட்ட இருவரையும் கொண்ட, மதிப்பீட்டுக்குழு இன்று காலை கூடவிருக்கிறது. இந்த மதிப்பீட்டுக்குழு ஒவ்வொரு விண்ணப்பதாரிகளாலும் தனித்தனியாக குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும் அளிக்கைகளையும் மதிப்பீடு செய்த பின்னர், ஆறு பேரில் இருந்து திறமை அடிப்படையில் புள்ளிகளைப் பெறும் ஐந்து பேரது விவரங்களைப் பேரவை உறுப்பினர்களின் மதிப்பீட்டுக்காக இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கும்.
மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களால் ஒவ்வொரு விண்ணப்பதாரிகளும், தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டதைப் போலவே, ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் – ஒவ்வொரு விண்ணப்பதாரிகளையும் சுற்றறிக்கையின் படி தனித்தனியாக மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்குவர். இந்த மதிப்பீடு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
சுயாதீன மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்களின் தனித் தனி மதிப்பீட்டுப் புள்ளிகள், பேரவை உறுப்பினர்களின் தனித்தனி மதிப்பீட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெறும் திறமைப் பட்டியல் பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நாளைய தினமே அனுப்பி வைக்கப்படும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு ஊடாகத் தனது சிபார்சை ஜனாதிபதிக்கு முன்வைக்கும். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் படி, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அவர்களில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்வார்.
இதே நேரத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கடந்த காலங்களில் தனக்கெதிராகப் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தன்னைப் பழிவாங்கும் வகையில் செயற்பட்டதனால், துணைவேந்தர் தெரிவிலும் தான் வேண்டுமென்றே பழிவாங்கப்படலாம் என்பதால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தனக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று விண்ணப்பதாரிகளுள் ஒருவரான பேராசிரியர் செ. இளங்குமரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முற்காப்புக் கோரிக்கை ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.
கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் காரணம் எதுவும் கூறப்படாமல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின் துணைவேந்தருக்கான அதிகாரங்களுடன் கடந்த வருடம் மே மாதம் முதல் மூன்று மாத காலத்துக்கு வாழ்நாள் பேராசிரியர் க. கந்தசாமி தகுதி வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் துணைவேந்தர் தெரிவுக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த போதிலும், கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அந்தப் பணிகளைப் பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டதுக்கமைய தெரிவு பிற்போடப்பட்டிருந்தது. அதன் பின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், பல்கலைக்கழகங்களின் பேரவைகளும் செயலிழந்ததன் காரணமாக இழுபறிப்பட்ட துணைவேந்தர் தெரிவு, கடந்த பெப்ருவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய ரத்துச் செய்யப்பட்டிருந்ததுடன் பேராசிரியர் க. கந்தசாமிக்குத் தகுதி வாய்ந்த அதிகாரியாக மூன்று மாதங்களுக்கொரு முறை நியமனம் நீடிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.