நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் வகையில் நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசியலமைப்பில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய வெகுசன ஊடகத்துறை அமைச்சராக நேற்றைய தினம் கெஹலிய ரம்புக்வெல்ல தமது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார். பின்னர் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அது தொடர்பில் மேலும் கூறுகையில்,
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கும் நிலையில் இந்த ஜனாதிபதியால் நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் வேறு எந்த ஜனாதிபதியாலும் அதனை மேற்கொள்ள முடியாது என்பதே மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாகவுள்ளது.
1978ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பானது அதன்மூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாதென்ற நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் ஆணை மூலம் பெற்றுக் கொண்டுள்ளது.
அந்த நிலையைப் பொய்யாக்கி தற்போதைய அரசாங்கம் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது எமது பாரிய பொறுப்பாகும். அதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிடப்பட்ட வகையில் அமைச்சரவையை நியமித்துள்ளார். அதற்கான வேலைத்திட்டங்களையும் மிக தெளிவானதாக உட்படுத்தி இருக்கின்றார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இரண்டு முக்கிய விடயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில் முதலாவதாக முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை தேசிய உற்பத்தி ஏற்றுமதியை பலப்படுத்துவதும் முக்கியமானதாகும்.
மக்கள் இறைமை பற்றி பேசுவோமானால் மக்கள் இறைமைக்குட்பட்டதாவே அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கான உறுதிப்பாட்டை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என்றார்.



















