அனுராதபுரம் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த சுமார் 90 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக பிரதேச தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 16 வயதான மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி முதலாவது முறை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மீண்டும் அவர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தொற்று இல்லையென முடிவு பெறப்பட்ட நிலையில், அவரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.
மாணவி கடந்த 10ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர் ராஜாங்கனை பகுதியில் முன்னதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் வீட்டிற்கு எதிர்வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், மாணவியின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரையில் அவரது வீட்டை அண்மித்து வாழும் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மாணவி கல்வி பயின்ற பாடசாலையைச் சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜன சோமதிலக குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகுமென அவர் தெரிவித்தார்.