புதிய அரசாங்கம் தமது அமைச்சரவையின் மூலம் தமது நோக்கங்களை தெளிவாக தெரிவித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவியேற்றதன் மூலம் 19வது அரசியலமைப்பு திருத்தப்படப்போகிறது என்பதை அரசாங்கம் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் புதிய நாடாமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னரே அரசாங்கம் 19வது அரசியமைப்பு திருத்தததை மீறியுள்ளது என்று ஹரின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை புதிய அரசாங்கத்தில் உள்ள பலருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் முன்னிலையாகும் சட்டத்தரணி அலி சப்ரி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமையானது நீதித்துறை எவ்வாறு செல்லப்போகிறது என்பதற்கான கட்டியம் என்று ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், அமைச்சரவையில் பெரும்பாலானோர் 70 அகவையை கடந்தவர்கள் என்ற வகையில் இது அகவை மூத்த அமைச்சரவையாக உள்ளது என்று தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் 70 அகவை வரை பணியாற்றமுடியுமானால் அரசப்பணியாளர்களையும் 70 அகவை வரைக்கும் பணியாற்ற அனுமதிக்கவேண்டும் என்றும் மரிக்கார் கோரிக்கை விடுத்தார்