தமிழகத்தில் காதலனுடன் சொகுசாய் வாழ்வதற்காகவும், தன்னைப் பற்றிய உண்மைகள் வெளிவராமல் இருக்கவும் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய முயன்ற மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவிலின் திருப்பபுரத்தை சேர்ந்தவர் கணேஷ், இவரது மனைவி காயத்ரி, இவர்களது 4 வயதில் குழந்தை இருக்கிறது.
அருகிலுள்ள ப்ளே ஸ்கூல் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் காயத்ரி, இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கணேஷை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
கணவரின் சத்தம் கேட்டதும் அலறித்துடித்த மனைவி, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார், இதுகுறித்து வழக்குபதிவு செய்த வடசேரி பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
வீட்டில் மனைவி தூக்கத்தில் இருக்கும் போது நள்ளிரவில் கதவை திறந்து உள்ளே வந்தது யார் என்று விசாரிக்குமாறு உறவினர்கள் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்,
இதையடுத்து அவரது மனைவியிடம் விசாரித்த போது, இந்த கொடூர கொலை முயற்சி சம்பவத்திற்கு பின்னணியில் காதல் விவகாரம் இருப்பது தெரியவந்தது.
திருமணத்திற்கு முன்பாகவே காயத்ரி யாசின் என்பவரை காதலித்து வந்ததும், காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் கணேஷ்சுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்னரும் யாசினுடன் பேசி வந்துள்ளார் காயத்ரி, இந்நிலையில் காயத்ரியின் வீட்டுக்கு அருகே ப்ளே ஸ்கூலை தொடங்க யாசின் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக காயத்ரி வீட்டை அடமானம் வைத்து யாசினுக்கு பணம் கொடுத்துள்ளார், அத்துடன் அதே ஸ்கூலில் ஆசிரியராகவும் பணிக்கு சேர்ந்துள்ளார்.
இதனால் இருவரும் தடையின்றி பழகி வந்த நிலையில், ப்ளே ஸ்கூலில் லாபம் வரவில்லை, பணமும் கட்ட வேண்டி இருந்ததால் கணேஷ் அடமானம் குறித்து காயத்ரியிடம் கேட்டுள்ளார்.
தான் மாட்டிக் கொள்வோம் என்ற சூழலில் யாசினுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணேஷை கொன்றுள்ளார் காயத்ரி.
கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கொலை முயற்சிக்கு மூளையாக செயல்பட்ட மனைவி காயத்ரி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.




















