தமிழகத்தில் மார்வாடி பெண்களை குறிவைத்து பழக்கம் எற்படுத்தி கொண்டு அவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரவீன் கட்டோலயா. இவரது மனைவி ராக்கி கட்டோலயா அழகு நிலையக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சூளை பகுதியைச் சேர்ந்த திலீப் (28) என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் பிரவீண் கட்டலோயா வீட்டுக்கு திலீப் வந்து சென்று குடும்ப உறுப்பினர்களிடம் நட்பு பாராட்டும் அளவுக்கு மாறியுள்ளது.
அப்போது கஸ்டம்ஸில் வெளிநாட்டிலிருந்து ஐபோன் கலெக்சன் வந்திருப்பதாகவும் அதனை வாங்கி தனியாக பிஸ்னஸ் செய்யலாம் என ராக்கி கட்டோலயாவிடம் திலீப் கூறியிருக்கிறார். மேலும் பாதி பணம் தான் ஏற்பாடு செய்வதாகவும் மீதிப் பணத்தை தாங்கள் தந்தால் இருவரும் சேர்ந்து பிசினஸ் செய்யலாம் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய பிரவீண் கட்டலோயாவின் மனைவி ராக்கி கட்டோலயா ரூபாய் 2,73,000 கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்த பிரவீன் கட்டலோயா மற்றும் அவரது மனைவியும் கேட்க, திலீப் நாள் கடத்தியுள்ளார். இந்த நிலையில் திலீப் தனது மொபைல் நம்பரை மாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதனால், பிரவீண் கட்டலோயா வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த திலீப்பை, பொலிசார் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர் ரூபாய் 2,73,000 ஏமாற்றியது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், மார்வாடி பெண்கள் பலரை இப்படி ஏமாற்றி திலீப் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு திருவல்லிக்கேணியில் தங்கி ராயப்பேட்டையில் ஆடை நிறுவனம் வைத்திருக்கும் ரவீந்திரன் என்பவரின் அண்ணிக்கு பேஸ்புக் மூலமாக திலீப் பழக்கமாகி உள்ளார்.
மேலும் இந்த பழக்கமானது வீடுவரை வந்து செல்லும் அளவிற்கு நட்பாக மாறியது. கடந்த 2017 ஆம் ஆண்டு திலீப் வீட்டுக்கு வரும்பொழுது ரவீந்திரனின் வீட்டிலிருந்த 30 சவரன் நகையை திருடியுள்ளார் என்பதும் இதனை அப்போதே ஜாம்பஜார் காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது மட்டுமல்லாது வேலை வாங்கித்தருவதாக கூறி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏர்ஹோஸ்டஸ் மாணவி பிரியாவிடம் ரூபாய் 2.50 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் இதுகுறித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைந்தகரை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்து இருப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் திலீப்பிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏர்ஹோஸ்டஸ் படிக்கும் மாணவிகளிடம் மோசடி செய்வதற்காகவே தி.நகரிலுள்ள ஒரு தனியார் இன்ஸ்டிட்யூடில், திலீப் அந்த மாணவிகளுடன் சேர்ந்து படித்துள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் பிரியா என்ற மாணவியுடன் பழகி சென்னை விமான நிலையத்தில் விமான பணிப்பெண் வேலை ரெடி செய்துவிட்டதாகவும் கூறி ரூபாய் 2.50 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
இது போன்று பல பேரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்து உல்லாசமாகவும், சொகுசாகவும் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த மோசடிகளை எல்லாம் திலீப் ஒப்புதல் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார்.
பேஸ்புக்கில் அன்பாக பேசி மயக்கும் திலீப்பிடம் சிக்கிய ஐந்திற்கும் மேற்பட்ட வசதியான வீட்டு குடும்ப பெண்களும் தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
குடும்ப நலனுக்காக கணவன்மார்கள் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்க, முன் பின் தெரியாத நபருடன் பேஸ்புக்கில் பழகி அவர்களை வீட்டுக்கு வரவழைத்து லட்சங்களை அள்ளிக்கொடுப்பது குடும்பத்தில் வீணான சச்சரவுகளை உருவாக்கும் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.