தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயருடனேயே தொடர்ந்து இயங்க, வி.மணிவண்ணன் தரப்பு முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரை பதிவு செய்யாமல் பாவித்து வரும், கஜேந்திரகுமார் தரப்பு திண்டாட்டத்தில் உள்ளது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியென்ற பதிவு செய்யப்படாத அமைப்பை-கஜேந்திரகுமார் கூறும் இயக்கத்தை- உருவாக்கியவர்களில் வி.மணிவண்ணனும் ஒருவர். எனினும், குடும்ப கட்சி ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க தயாரில்லாத கஜேந்திரகுமார் தரப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பெயரில் தேர்தல்களில் போட்டியிட்டதுடன், தமிழ தேசிய மக்கள் முன்னணியை பதிவு செய்யவில்லை.
அது ஒரு மக்கள் இயக்கம் என வெளியில் கூறிக்கொண்டிருந்தாலும், உண்மையில்- சட்டரீதியாக கஜேந்திரகுமாரின் தாயாரின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு குழுவாகவே செயற்பட்டிருந்தது. தமிழ் காங்கிரசின் கொள்கை சார்ந்த இறுதி முடிவுகளை இன்றும் எடுப்பவராக, கஜேந்திரகுமாரின் தாயாரே இன்றும் இருக்கிறார். கஜேந்திரகுமாரின் அரசியல் சார்ந்த முக்கிய- இறுதி முடிவுகளையும் அவரே எடுக்கிறார்.
இந்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பதிவு செய்து, வெளியில் கூறுவதை போலவே- உண்மையில் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்ற நிலைப்பாட்டை அண்மைக்காலமாக வி.மணிவண்ணன் தெரிவித்து வந்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரசின் “சுப்ரீம் பவராக“ கஜேந்திரகுமார் கருதிய- அவரின் தாயாரின் பிடியை நழுவச்செய்ய மணிவண்ணன் முயல்கிறார் என்பதே கஜேந்திரகுமாரின் அச்சமாக இருந்தது.
தயாரின் ஆதிக்கத்திற்கு சவால் விட்ட மணிவண்ணனை கட்சியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் நீக்கிவிட்டதாக நிம்மதியாக இருந்த கஜேந்திரகுமார் தரப்பிற்கு புதிய தலையிடியாக உருவெடுத்துள்ளது- பதிவு செய்யப்படாத- குடும்ப ஆதிக்கத்திற்கு கவசமாக இருந்த-தமிழ் தேசிய மக்கள் முன்னணி.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உண்மையான தேசிய அமைப்பாளராக தானே செயற்படுகிறேன் என அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தார். அதன் சூட்சுமம்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரிலேயே செயற்பட்டு, அந்த கட்சியை பதிவு செய்வது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்களில் ஒரு பகுதியினர் மணிவண்ணன் தரப்புடன் நிற்பதால், இந்த அதிரடி நடவடிக்கையில் துணிந்து இறங்கியுள்ளார்.
விரைவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரில் பகிரங்க கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக தகவல்.
இந்த அமைப்பை உண்மையான மக்கள் இயக்கமாக கட்டியெழுப்புவது என்ற முடிவில் மணிவண்ணன் தரப்பு உள்ளது. மணிவண்ணன் தரப்பின் இந்த முடிவினால் கஜேந்திரகுமார் தரப்பு பெரும் தலையிடியில் இருக்கிறது.