தமிழ் மக்கள் உரிமையையும், அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லையென்பதற்காக, மக்கள் உரிமை சார்ந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றி விட்டார்கள் என்பது தவறானது என தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன். தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 10 வருடங்களில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்தோ, அபிவிருத்தி சார்ந்தோ எந்த முன்னேற்றத்தையும் கூட்டமைப்பு காணவில்லை. இ து நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவல்ல. இது உள்ளூராட்சி தேர்தலிலேயே எற்பட்டது.
நல்லாட்சி அரசை முண்டு கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் எதையும் பூர்த்தி செய்யவில்லை.72 வருடங்களாக தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் தலைமுறைகளை குழிதோண்டி புதைத்து விட்டன. ஆனால், அவர்களின் தலைமுறைகள் நன்றாக வாழ்கிறார்கள்.
தமிழ் மக்கள் அரசியல், அபிவிருத்தி இரண்டையும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டிற்கும் உரிய கட்சியல்ல. அதனால்த்தான் கடந்த தேர்தல்களில் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் உரிமையையும், அரசியலையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
ஈழம், சுயாட்சி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும். அவை வந்தால் நல்லது. ஆனால், அதற்கு முன்னர் மக்களின் அவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமே.
இவை பேசிக்கொண்டிருக்க நன்றாக இருக்கும். விஜகாந்த்தின் அதிரடி சண்டைக்காட்சிகளை பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் யதார்த்தம் அதுவல்லவே.
வடக்கு மக்களின் பிரச்சனைகள் வேறு, கிழக்கு மக்களின் பிரச்சனைகள் வேறு. மலையக தமிழர்களின் பிரச்சனைகள் வேறு. ஆனால் தமிழ் தலைவர்கள் அனைத்து பிரச்சனையையும் ஒன்றாக பார்க்கிறார்கள். வடக்கு பிரச்சனை வடக்கிலும், கிழக்கு பிரச்சனை கிழக்கிலும் தீர்க்கப்பட வேண்டும். அப்படியென்றால்த்தான் அந்த மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும்.
வடக்கு கிழக்கு இணைப்பு, சுயாட்சி, தன்னாட்சி எல்லாம் நல்லது. ஆனால், அந்தந்த பகுதி மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.