அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை அரசு கைவிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டின் அடிப்படை தேவை 20ஆவது திருத்தமில்லை என்பதால் அதனை அரசு கைவிட வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் உடனடி கடும் நெருக்கடிகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 20ஆவது திருத்தம் குறித்த தங்கள் நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
ஜனநாயகத்தையும் முன்னேற்றகரமான விடயங்களையும் ஊக்குவித்த 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது.
உத்தேச அரசமைப்பு மாற்றங்கள் குறித்து அரசு பிளவுபட்டுள்ளது. புதிய திருத்தங்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை. அமைச்சர்களுக்குக் கூட 20ஆவது திருத்த வரைவின் ஆவணத்தை தயாரித்தது யார் என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது.
அரசு முதல் கட்டத்திலேயே தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் காரணமாகவே மறு ஆய்வுக்காகப் புதிய குழுவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்” – என்றார்.