திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டியாகலஹின்ன அரசுக்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் வன இலாகா அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்தியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் மொரவெவ பிரதேசத்தில் கடமையாற்றி வரும் வெலிகம பகுதியைச் சேர்ந்த வன இலாக்கா அதிகாரி ஏ. ஜீ. நதி பிரசங்க (39வயது) படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- ஆண்டியாகலஹின்ன அரசுக்குச் சொந்தமான காட்டுப்பகுதியை துப்பரவு செய்து கொண்டிருக்கும்போது வன இலாகா அதிகாரிகள் சென்று துப்பரவு செய்து கொண்டிருந்தவர்களை கைது செய்ய முற்பட்ட போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி உள்ளது.
இதனால் வன இலாக்கா அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நான்கு ஆண்கள் உட்பட பெண் ஒருவரும் தன்னை பொல்லால் தாக்கியதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பொலிஸ் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதேவேளை வன இலாக்கா அதிகாரியை தாக்கியதாக குற்றம் சுமத்தப்படும் கணவன், மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகிய மூவரும் தங்களை வன இலாகா அதிகாரிகள் தாக்கியதாக கூறி அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
வன இலாகா அதிகாரிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.