மலையகத்தில் மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தொடர்மழை காரணமாக மலையகத்தில் மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் ஏற்படுவதற்கான அபாயநிலையும் காணப்படுகின்றது.
அத்துடன் அதிக காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. பிரதான பாதைகளில் சிறு மண்சரிவுகளும் கற்பாறைகளும் சரிந்து விழுதலும் ஏற்பட்டு வருகின்றன.
கினிகத்தேனை பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று மின்கம்பத்தில் விழுந்ததனால் அப்பகுதிகளில் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு போக்குவரத்தும் பாதிப்படைந்தது. மேலும்
கொழும்பு பிரதான வீதியில் பாரிய கற்பாறை சரிந்து விழுந்ததனால் இரண்டு நாட்கள் கொழும்பு_ ஹட்டன் போக்குவரத்து பாதிப்படைந்து காணப்பட்டது. இதன் போது மக்கள் பல வகையிலும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர்.
அதை போன்று கொழும்பு_ ஹட்டன் பிரதான வீதியில் கரோலினா பகுதியில் பாரிய மரம் ஒன்று தொலைத்தொடர்பு கம்பத்தில் விழுந்ததினால் ஏற்பட்ட போக்குவரத்து தடையால் பலரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.
எதிர்வரும் தினங்களில் மழை தொடருமானால் மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் மலையகத்தில் குறிப்பாக வட்டவளை, கினிகத்தேனை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட கூடிய ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் மக்கள் குறித்த பிரதேசங்களில் மிக அவதானத்துடன் இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.