இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக கற்குளம் படிவம் 1,2,3,4 ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதான வீதி புனரமைப்பிற்கு 78 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப பணிகள் உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இருபதாவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக பல விமர்சனங்கள் வருகின்றன. இவ் இருபதாவது திருத்தம் தொடர்பாக தற்போதுதான் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல விமர்சனங்கள் வருகின்றன, அவ்வாறு வருகின்ற விமர்சனங்களை எல்லாம் ஒன்று திரட்டி இலங்கை மக்களுக்கு பிரயோசனமான அமையக்கூடிய வகையிலே ஒருதிருத்தமாகவே இது இருக்கும்.
மேலும் அரசியல் அமைப்பு திருத்தத்தை கோரி வாக்குகேட்டே இன்று 151 நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனவே மக்களுக்கு பாதிப்பு இல்லாததும், மக்களுக்கான விரைவான அபிவிருத்திகள்,மக்களுக்கு அரசியல் மட்டத்திலோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்க்கின்ற விதத்திலே நல்லதொரு அரசியல் அமைப்பு கிடைக்கும்.
இதுதொடர்பாக பலவற்றை பேசுவார்கள் குறிப்பாக எதிர்க்கட்சி என்றாலே எதிர்ப்பதுதான் வேலையாகும். அவ்வாறான பேச்சை கேட்டு மக்கள் யோசிக்க வேண்டிய தேவையில்லை. இவ் இருபதாவது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம்.
எல்லா தேர்தல்களிலும் இனவாதம் கக்கப்படும் ஆனால் இந்த தேர்தலில் மிகவும் வித்தியாசமாகவும் பலவிதமாகவும் இனவாதம் கக்கப்பட்டாலும் கூட அதற்கு வன்னியில் இடமில்லை என்றும் நாட்டிலும் இடமில்லை என்று பெரும்பான்மை சமூகமும் காட்டியுள்ளது.
அங்கு மதகுருமார்களை கொண்ட கட்சி போட்டியிட்டது ஆனால் வெற்றி பெறவில்லை மாறாக அனைத்து இடங்களிலும் கிடைத்த வாக்குகளை கொண்டு ஒரு ஆசனத்தை பெற்றார்கள். இவ்வாறுதான் பெரும்பான்மை சமூகம் அவ்வாறானவர்களை வைத்திருக்கின்றார்கள். இதைபோன்றே இனவாதிகளுக்கு இடமில்லை என்பதை நீங்களும் தெளிவாக காட்டியிருக்கின்றீர்கள்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வாக்குகளை நீங்கள் வழங்குவதை விட ஆளுங்கட்சியில் வெற்றி பெறுபவருக்கு வாக்கு போடுவதே உங்களிற்கு பலமாக இருப்பதோடு மக்கள் தங்களோடு இணைந்து விட்டனர் என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் பார்ப்பார்கள்.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் நீங்கள் எமக்களித்த ஆதரவானது அவர்களிற்கு திருப்தியாக இருந்தது. எதிர்காலத்தில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.