24 வயதான கர்ப்பிணி பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற நபரை கட்டுகஸ்தொட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு கட்டுகஸ்தொட காவல்நிலையத்திற்கு வந்த 34 வயதுடைய நபரொருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது மனைவியை எவ்வாறு கொலை செய்தார் என குறித்த நபர் காவல்துறையினரிடம் விளக்கமளித்த சந்தர்ப்பத்தில், சம்பவ இடத்திற்கு காவல்துறை குழுவொன்று விரைந்து சென்றுள்ளது.
இதனையடுத்து, படுக்கையில் கிடந்த கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்து இருப்பதை கண்ட காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான தகராறைத் தொடர்ந்து அவரது கணவர் அவரைக் கொல்ல முயற்சித்ததாக காவல்துறையினரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர் இன்றைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்