தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவியை புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இலவச கல்வியினை வழங்கும் நாட்டுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நிக்கவெரட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு நேற்று நடைப்பெற்ற புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு குறித்த பாடசாலை அதிபரினால் அனுமதி வழங்கப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
எக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த மாணவி பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார் என்பது முதலில் அறியப்பட வேண்டும்.
விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சமின்றிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.



















