கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடங்களில், குறிப்பாக பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது 06 மாத சிறைத்தண்டனை என்ற எச்சரிக்கையுடன் கூடிய வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹான, சுப்பர் மார்க்கட் என்ற பல்பொருள் அங்காடிகளில் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பல்பொருள் அங்காடிகளில் உள்ள பணக்கொடுக்கல் வாங்கல் இடத்திலும் வரிசையில் நிற்கும் மக்கள் சமூக தூரத்தை கடைபிடிக்கவும் 1 மீட்டர் தூரத்தை பராமரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பல்பொருள் அங்காடிகளில் சமூக தூரத்தை மீறுபவர்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் காவல்துறையினருக்கு அறிவிப்பார்கள்,
இதன்போது சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடியின் நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளின் நிர்வாகங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமது நுழைவு இடங்களில் கைகளை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளன.
அத்துடன் வாடிக்கையாளர்கள் மற்றும் அங்காடிகளின் பணியாளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை வாடிக்கையாளர்களுக்கு வெப்பநிலை சோதனைகளை மேற்கொள்ளுமாறும் பல்பொருள் அங்காடி நிர்வாகங்களிடம் கோரப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படக்கூடிய வாடிக்கையாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை குறித்து பல்பொருள் அங்காடிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹான தெரிவித்தார்.