திருப்பத்தூர் அருகே பனிமூட்டம் காரணமாக தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரை இறங்கியது. இதனை பார்க்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்:
கோவை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். நகைக்கடை அதிபர். இவர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் பெங்களூருவை சேர்ந்த சுனில் என்பவருக்கு சொந்தமான ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தினார். நேற்று அதிகாலை கோவையிலிருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டது. அதில் 2 பைலட்டுகள் உள்பட 7 பேர் இருந்தனர்.
இதனிடையே திருப்பத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்தமழை பெய்தது. இதனால் தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுமையான குளிர் நிலவியது. இந்த பகுதி ஏலகிரி மலை அடிவாரத்தையொட்டி உள்ளது. சில கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையும் உள்ளது. பலத்த மழை பெய்த நிலையில் நேற்று காலையில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவையில் இருந்து சீனிவாசன் குடும்பத்தினர் வந்த ஹெலிகாப்டர் திருப்பத்தூரை நெருங்கிக்கொண்டிருந்தது. கடுமையான பனிமூட்டத்தால் ஹெலிகாப்டரை மேலும் இயக்குவது ஆபத்தாக இருந்தது. இதனால் நிலைமையை உணர்ந்த பைலட்டுகள் சமயோசிதமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை முன்னெச்சரிக்கையாக வயலில் பாதுகாப்பாக இறக்க முடிவு செய்தனர். அதன்படி கந்திலியை அடுத்த தாதன்குட்டை பகுதியில் வந்தபோது ஹெலிகாப்டரை அவசர அவசரமாக அவர்கள் வயலில் பத்திரமாக தரையிறக்கினர்.
இதுபற்றி தகவலறிந்த சுற்று வட்டார கிராமத்திலுள்ள பொதுமக்கள் ஹெலிகாப்டரை காண கூட்டம் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து ஹெலிகாப்டரை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் வானிலை சரியானதும் ஹெலிகாப்டர் காலை 11 மணிக்கு மீண்டும் திருப்பதியை நோக்கி கிளம்பியது. பனிமூட்டம் காரணமாக பைலட்கள் அவசரமாக தரையிறக்கம் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறார்.