பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.
வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும் Abdelhakim Sefrioui என்ற மதபோதகரும் சேர்ந்து ஆசிரியருக்கு எதிராக வீடியோக்கள் வெளியிட்டதோடு, அவரை இடைநீக்கம் செய்யவும் கோரியுள்ளனர்.
இந்நிலையில்தான், பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த Samuelஐ Aboulakh Anzorov என்ற நபர் கத்தியால் கொடூரமாக தாக்கிக் கொன்று, அவரது தலையையும் வெட்டினார்.
Abdoulakh (18) மாஸ்கோவில் பிறந்த செசன்ய வம்சாவளியினராவார். அவரது தங்கை ஐ.எஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது.
Samuel கொல்லப்பட்ட தகவலறிந்த பொலிசார் சிறிது நேரத்தில் கொலையாளியை சுற்றி வளைக்க, அவர் பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்த, பொலிசார் அவரை சுட்டுக்கொன்றனர்.
அந்த ஒருவருடன் நிற்காமல் தொடர்ந்து பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்து வருகின்றனர்.
ஆசிரியர் Samuel மீது புகாரளித்த மாணவி, அவரது தந்தை Brahim Chnina, அவருடன் பள்ளிக்கு சென்று புகாரளித்த மத போதகர் Abdelhakim Sefrioui, அவரது மனைவி, கொலையாளி Abdoulakhஇன் தந்தை, தாய், தாத்தா, 17 வயதான அவரது தம்பி ஆகியோர் மற்றும் அவரது சமூக வட்டத்திலுள்ள ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடைசியாக Abdoullakhஇன் நண்பரான 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் இந்த படுகொலை தொடர்பாக தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டையே கொந்தளிக்கச் செய்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரதமர், பாரீஸ் மேயர் மற்றும் கல்வி அமைச்சர் உட்பட பலரும் அந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.