கோவையில் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக போராடிய திருநங்கை சங்கீதா தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் திருநங்கைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி என்எஸ்ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் ஒரு குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்தவர் சங்கீதா (58).
திருநங்கையான இவர் தங்கள் இன நல்வாழ்வுக்காக தனி அமைப்பை தொடங்கி அவர்களுக்காகவே பாடுபட்டு வந்தார். திருநங்கைகளின் படிப்புகளுக்கு உதவி வந்தார்.
ஆதரவின்றி தவித்து வந்த திருநங்கைகளுக்கு சாலையோரத்தில் கடைகளை வைத்து கொடுத்து உதவுவது போன்ற பணிகளை செய்து வந்தார். அண்மையில் வடகோவை பகுதியில் டிரான்ஸ் கிச்சன் என்ற உணவு விடுதியை தொடங்கி நடத்தி வந்தார். இது முற்றிலும் கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்காகவே தொடங்கினார்.
இந்த உணவகத்தில் முற்றிலும் திருநங்கைகளே பணிபுரிந்து வந்தார்கள். இங்கு தயாரிக்கப்படும் அனைத்து உணவும் கோவை மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிலையில் சங்கீதாவின் வீட்டருகே ஒரு டிரம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக சாய்பாபா கோயில் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து டிரம்மை திறந்து பார்த்தனர். அப்போது அதில் சங்கீதா சடலமாக இருந்தார். அதில் உப்பு நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
விசாரணையில் சங்கீதா கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரியவந்தது. வடகோவையில் இயங்கி வந்த டிரான்ஸ் கிச்சன் உணவகத்தில் இரு இளைஞர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். அவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.