நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலில் யாழ். மாவட்டத்தில் நால்வருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏனைய மாவட்டங்களைப் போல் யாழில் தொற்று பரவாமலிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ். அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருவர் தொற்றுக்குள்ளான நிலையில், வவுனியா, நெடுங்கேணியில் வீதி புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு ஏற்பட்ட தொற்றில் இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், குறித்த இருவரும் தற்போது வவுனியா பகுதியில் தனிமைப்படுத்தலில் உள்ளார்கள்.
அவர்கள், யாழிற்கு வந்து சென்றதன் பிரகாரம் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நேற்றைய தினம் வரை 241 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேரை தனிமைப்படுத்தியிருக்கின்றோம். படிப்படியாக தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. தனிமைப்படுத்தப்படுவோர் பி.சி.ஆர். பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லையென உறுதியானதன் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள்.



















