அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு நாட்களுக்கு இலங்கையில் தங்கவுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என பல உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்டிரம்ப் பதவிக்குவந்து இதுவரைக் காலத்திலும் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற உயர்மட்ட அமெரிக்க அதிகாரியாக மைக் பொம்பியோ விளங்குகின்றார்.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருக்கின்ற நிலையில் அந்நாட்டு இராஜாங்க செயலாளரது விஜயம் அமைகிறது.
இந்த விஜயத்தில் குறிப்பாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பம் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பயணத்தடையை நீக்குமாறு இலங்கை சார்பாக கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை இவரது இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் பல வருடங்களாகத் திருத்தப்படாத வீதிகளும் அவசர அவசரமாக செப்பனிடப்பட்டு வருகின்றது.
மேலும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளதை அடுத்து, தேவாலய வீதி சீர்திருத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.