முல்லைத்தீவு முள்ளியவளை ஆலடி பகுதியில் நேற்று (25) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அந்த விபத்து எப்படி இடம்பெற்றது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் உழவு இயந்திரம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
முள்ளியவளை இரண்டாம் வட்டாரம் பகுதியில் உள்ள தனது வீட்டில்
இருந்து முள்ளியவளை நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபரே விபத்திற்குள்ளாகினார். முள்ளியவளை ஆலடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் இரண்டாம் வட்டாரம் முள்ளியவளை யைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாகிய 21 வயதுடைய மகேந்திரன் கவின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். உயிரிழந்தவரின் சடலம் இரவு அந்த இடத்திலேயே இருந்தது. பொலிசார் சடலத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்.
இந்நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற தடயவியல் பொலிசார் . சட்ட வைத்திய அதிகாரி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் உள்ளிட்டவர்கள் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டனர். சடலம் தற்போது மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை குறித்த விபத்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்றின் பின்னால் மோதுண்டு ஏற்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் விபத்தை தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து உழவு இயந்திரத்தை சாரதி கொண்டு சென்று விட்டார். இன்று இந்த உழவு இயந்திரம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.