அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இணையம் வழி வகுப்புகளில் மூன்று முறை தவறவிட்ட 12 வயது சிறுவன் மீது கைது நடவடிக்கை பாயும் என பாடசாலை நிர்வாகம் மிரட்டல் விடுத்துள்ளது.
கலிபோர்னியாவின் லாஃபெட்டேயில் உள்ள ஸ்டான்லி நடுநிலைப் பள்ளியில் தனது வருகை பதிவு தொடர்பாக மெரெக் மாஸ்ட்ரோவ் என்ற 12 வயது சிறுவன் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தக் கூடும் என பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் தந்தை மார்க் தனியார் செய்தி ஊடகம் ஒன்றில் தெரிவிக்கையில், மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சரியான காரணமின்றி தனது மகன் 30 நிமிடங்களுக்கு மேல் இணைய வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை என்று அவருக்கு ஒரு கடிதம் வந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பாடசாலை நிர்வாகம் தமது மகனை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ள மார்க்,
தமது மகனை அந்த பாடசாலை நிர்வாகம் சச்சரவை ஏற்படுத்தும் சிறுவனாக வகைப்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், சிறுவன் கைது செய்யப்படவும், பெற்றோர் நீதிமன்ற விசாரணையை எதிகொள்ளும் சூழல் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
பள்ளி முதல்வர் பெட்ஸி பால்மட் தெரிவிக்கையில், புதிய சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இணையம் வழியான வகுப்புகளில் கலந்துகொள்ளாத மாணாக்கர்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
கடிதம் அனுப்புவது தங்களின் கடமை எனவும், அனைத்து மாணவர்களும் வகுப்புகளில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது தங்கள் பணி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்து மாதங்களில் ஒரு மாணவன் 90 நிமிடங்கள் வகுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக ஒரு மாகாண நிர்வாகம் அவனை கைது செய்யும் என்றால், இதைவிட கேலிக்கிடமான செயல் ஏதும் உண்டா என சிறுவனின் தந்தை மார்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் கலிபோர்னியா மாகாண சட்டத்திட்டத்தின்படி, ஒரு கல்வி ஆண்டில் சரியான காரணமின்றி 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாட்களை தவறவிட்டால், அது பெற்றோருக்கு 2,000 டொலர் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.