இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்றைய தினம் மட்டு மூவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இன்று இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், உயிரிழந்த மூவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜா-எல, திசேரா மாவத்தையை சேர்ந்த 41 வயது பெண் கொரோனா தொற்றினால் இன்று உயிரிழந்தார். இவர் கடந்த 24ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு பேலியகொட மீன் சந்தையில் இருந்தே தொற்று பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சைரோஸிஸினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அவரின் இறுதி சடங்குகள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இன்று பிற்பகல் கொட்டிகாவத்த பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொழும்பு கொம்பனித்தெரு – வேகந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார்.
87 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கும் பேலியகொட மீன் சந்தையில் இருந்தே தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் மகள் பேலியகொட மீன் சந்தையில் இருந்து வாங்கிய மீன்களை அந்த பெண் தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் குறித்த மீனை வீசச் சென்ற போது அதை கண்ட அயலவர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் மேற்கொண்ட சோதனையின் போது உயிரிழந்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய விஷேட தேவையுடைய இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது பீ.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்தது.
இவர்களின் இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் பொரலை பொது மயானத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.