இலங்கையில் 68 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்றும் அமுல் உள்ள நிலையில் நேற்றிரவுமுதல் மேலும் நான்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு, ஹோமாகம மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், கொழும்பு மாவட்டத்தில் 21 பொலிஸ் பிரிவுகளிலும், குருணாகல் மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவு களிலும், களுத்துறை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாய்ப்பளிக்கப்படும்.
மேலும் இந்த தினங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறக்கப்பட்டிருக்கும்.
அத்தோடு கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தங்களை திறப்பதற்கு அனுப்பதிக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்ட்டின் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் நேற்று மட்டும் 500 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மட்டும் நாட்டில் 164 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதில் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 156 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை பேலியகொடை மீன் சந்தை மூலம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பலர் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணித்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், தங்களின் பேருந்துகளின் இலக்கங்கள் நன்கு தெரியக்கூடிய வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நேற்று மாத்திரம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக பதிவாகி உள்ள நிலையில் இலங்கையில் மொத்தமாக 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.