இன்று நள்ளிரவு தொடக்கம் 2ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதாக திடீர் அறிவித்தல் வெளியானதையடுத்து கொழும்பு நகரில் விற்பனை நிலையங்கள் மக்கள் முண்டியடிக்கத் தொடங்கினர்.
ஊரடங்கு உத்தரவு நேற்றுப் பிற்பகல் வெளியானதுமே கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது.
மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. சில பல்பொருள் விற்பனை நிலையங்களின் முன்பாக மக்கள் வரிசையில் நின்றிருந்ததைக் காண முடிந்தது.
இலங்கையில் கொரோனாவின் முதலாவது அலைத் தாக்கம் ஏற்பட்ட போது மக்கள் பொருட்களை வாங்குவதற்கு முண்டியடித்த காட்சியை நேற்றைய நிலைமை நினைவுபடுத்தியது.
சில கடைகளில் ஓரிரு மணி நேரத்துக்குள் அனைத்துமே விற்றுத் தீர்ந்து விட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் தமிழர்கள், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலேயே மக்கள் பொருட்களை வாங்குவதற்கு முண்டியடித்ததை பெருமளவில் காண முடிந்தது.
இதேவேளை நேற்றைய தினம் ஊரடங்கு அனுமதிப் பத்திரம் பெறுவதற்கும் பொலிஸ் நிலையங்களில் ஏராளமானோர் கூடியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.