வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும்.
கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வாழைத் தண்டின் அனேக மருத்துவக் குறிப்புகள் பற்றி நமது முன்னோர் ஆயுர்வேத புத்தகங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் கூறியிருக்கிறார்கள். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது.
கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும்.
சிறுநீர் எரிச்சலைப் போக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் தோன்றக்கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும், உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லாததாலும் ஏற்படுகிறது.
வாழைத்தண்டு மாதிரி ஸ்லிம்மாக இருக்கா பாரு என்று சில பெண்களைப் பார்த்து வியந்து கூறுவதுண்டு. வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப் படியான சதையைக் குறைத்து உடலை சிக்கென மாற்றும்.
இதிலுள்ள வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.
வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
உபயோகிக்கும் முறை
- வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும். நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும்.
- வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாள டைவில் குணமாகும். கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும்.
- இது ஒரு சிறந்த . உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும். வாழைத்தண்டு சாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர சிறுநீர்க்கற்கள் பொடிப்பொடியாகி சிறுநீருடன் வெளி யேறும்.
- வாழைத்தண்டு சூப் (வாழைத்தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம்) 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும்.
- இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான ரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.
- இரண்டு அவுன்ஸ் வாழைத்தண்டு சாற்றை நாள்தோறும் குடித்து வந்தால் வறட்டு இருமல் நீங்கும். வாழைத்தண்டை உலர்த்தி, பொடி செய்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
- வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள் ஆறும். வாழை சாற்றுடன் திரிபலா சூரணம் சேர்த்து அருந்த மலச்சிக்கல் நீங்கி அதனால் ஏற்பட்ட மூல நோய் மற்றும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
எச்சரிக்கை
- சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
- வாழைத்தண்டை வாரத்தில் மூன்று நாள்களுக்கு மேல் சேர்த்துக் கொள்வது உசிதமல்ல.
- வாழைத்தண்டு குளிர்ச்சி யானது என்பதால், அதை உண்ணும் நாட்களில் மற்ற குளிர்ச்சியான பொருள்களைக் குறைத்துக்கொள்ளவும்.