தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்கிடையிலான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் இன்று பகல் இந்த சந்திப்பு நடந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ஆகியோரும், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், க.சிவநேசன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கரைத்துரைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் பதவியை சுழற்சி முறையில் தமக்கு விட்டுத்தர வேண்டுமென ரெலோ கோரியது.
எனினும், வடக்கு கிழக்கில் பல சபைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதை சுட்டிக்காட்டிய புளொட், உடனடியாக அது சாத்தியமில்லையென்றது.
தமிழ் அரசு கட்சியும் அதே கருத்தையே கொண்டிருந்தது. இதனால், உடனடியாக சபைகளின் தவிசாளர்கள் மாற்றம் செய்வதில்லையென முடிவானது.
இந்த விவகாரத்தை மீண்டும் தை மாதத்தில் கூடி இந்த விவகாரத்தை ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டது.
தேர்தல்கள் திணைக்களத்தால் அண்மையில் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றை சுட்டிக்காட்டிய சீ.வீ.கே.சிவஞானம், கூட்டணி கட்சிகள் அனைத்தும் செயலாளர்களை அறிவிக்க வேண்டுமென அறிவித்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, கூட்டு கட்சிகளால் மாவை சேனாதிராசாவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக தீர்மானித்தனர்.
இதனை அடுத்து விரைவில் இது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் எனதீர்மானிக்கப் பட்டது.
இதனால் சம்பந்தனின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, சுமந்திரனின் தனி நபர் ஆதிக்கம் முழுமையாக அகற்றப்படும் என கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.