யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் இயந்தித்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில், ஐ திட்டத்தின் கீழ் கொடிகாமம்- புலோலி வீதி அகலப்படுத்தப்பட்டு காபெட் இடப்பட்டு வருகிறது. மாகா நிறுவனம் இந்த வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டு வருகிறது.
முள்ளி பகுதியிலுள்ள பாலமொன்றின் அருகே இன்று புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. இதன்போது, றோலர் இயந்திரம், தவறுதலாக பணியாளர் ஒருவர் மீது ஏறி விபத்திற்குள்ளானது.
அவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலாங்கொடை பகுதியை சேர்ந்த பிரேமரத்ன (60) என்பவரே உயிரிழந்துள்ளார். நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















