மனித உடலுக்கு ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமானது. அந்தவகையில் நாள் முழுக்க செயல்பாட்டில் இருக்கும் நமக்கு இரவுத் தூக்கம் அவசியமானது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டினாலும், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் தூக்கத்தைத் தொலைக்கின்றனர்.
நம் உடல் மற்றும் மன செயல்பாடுகள் அனைத்திற்கும் உணவுப் பழக்கமுறையே மிக முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, நாம் ஊட்டச்சத்து மிக்க சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால், இந்த தூக்கமின்மை பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வுகள் பல உள்ளன. இரவில் தூக்கத்திற்கு முன்னர் சில நீர் ஆகாரங்களை எடுத்துக்கொண்டால் நல்ல அமைதியான தூக்கம் கிடைக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் நன்றாகத் தூங்கினால் மட்டுமே அடுத்த நாள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
► சாதாரணமாக இரவில் தூங்குவதற்கு முன் பால் குடிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது தூக்கத்திற்கு அவசியமான ஒன்று. ஆனால், பாலில் சர்க்கரை தவிர்த்து வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை சேர்க்கலாம்.
► பாலில் ஒரு டீ ஸ்பூன் அளவு தேன் கலந்து தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அருந்தலாம்.
► சாதாரண பாலுக்கு பதிலாக பாதாம் பாலும் குடிக்கலாம்.
► இரவில் டீ குடிக்கலாம், ஆனால் காபி குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் காபி நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
► நல்ல வெதுவெதுப்பான நீரில் புதினாவைப் போட்டு கொதிக்க விட்டு இறுதியில் சிறிது எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
► அதேபோன்று தூங்கும் முன் இஞ்சி டீ குடிக்கலாம். இஞ்சி டீ குடிப்பதால் இரவு சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானமாகி நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும்.