மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி திட்டங்களையும் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானால் மலையகத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. எனினும் நல்லாட்சி வந்ததும் அரசியல் காரணங்களுக்காக அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆனால் எமக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மலையக மக்களுக்காக எவற்றையெல்லாம் செய்யவேண்டும் என எமது தலைவர் எதிர்ப்பார்த்தாரோ அவற்றையெல்லாம் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிச்சயம் செய்வோம்.
எமக்கு ஒத்துழைப்பு, உதவி வழங்கக்கூடிய இருவரே நாட்டின் ஜனாதிபதி, பிரதமராக இருக்கின்றனர். எனவே, எவ்வித தடையுமின்றி செய்வோம். மலையக பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்மொழி தேசிய பாடசாலை வரவுள்ளது.
அதேபோல தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவையும் நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அதற்கான சக்தி இருப்பதாலேயே வரவு – செலவுத் திட்டத்திலேயே அதற்கான யோசனை முன்மொழியப்பட்டது. வடக்கு, கிழக்கு, மலையகம் என தனித்தனியாக வரவு – செலவுத் திட்டங்களை முன்வைக்கமுடியாது.
இலங்கை மக்களுக்காகவே வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. மலையக மக்களும் இலங்கையர்களே, எனவே, அவர்கள் பட்ஜட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுவதை ஏற்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.