கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனையிலிருந்து அரசியல் நன்மைகளைப் பெற வேண்டாம் என்று அனைத்து அரசியல் மற்றும் மதத் தலைவர்களையும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரியுள்ளது.
அந்த சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
கொரோனா தடுப்பூசி மற்றும் சோதனை முறைகள் குறித்த தங்கள் அறிவிலிருந்து வெகு தொலைவில் எதுவும் பேச வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
“அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களுக்கு மருத்துவத் துறை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பற்றி எதுவும் தெரியாது.
இது தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவது மக்களை குழப்பமடையச் செய்யும், மேலும் மருத்துவத் துறை மீது மக்களின் நம்பிக்கையும் சிதைந்துவிடும், ”என்றார்.
இதற்கிடையில், இந்த வெள்ளிக்கிழமை (27)க்குள் புதிய கொரோனா கண்காணிப்பு முறையை நாட்டிற்கு வழங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேற்கு மாகாண சுகாதார சேவை இயக்குனர் இன்னும் கொரோனா நோயாளிகளின் நிலையான கண்காணிப்பு தரவுகளை தொற்றுநோயியல் துறைக்கு வழங்கவில்லை.
“புதிய முறையின் மூலம், நாட்டில் பரவுகின்ற கொரோனா தொற்றின் துல்லியமான வரைபடத்தை எங்களால் வழங்க முடியும், மேலும் அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.


















