போரில் உயிரிழந்த அவர்களது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு எனவும் , அதனை எவரும் தடுக்க முடியாது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே சந்திரிகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நல்லாட்சியில் இருந்த நினைவேந்தல் உரிமை, கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தான் என்றும், தற்போதைய ஆட்சியில் அது கிடையாது எனவும் அவர் கூறினார்.
போரில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர மூவின மக்களுக்கும் உரிமையுண்டு எனவும், அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் இருக்கவேகூடாது எனவும் குறிப்பிட்ட அவர் எனவே, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
நல்லாட்சியில் இருந்த நினைவேந்தல் உரிமை, கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தான்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் போரில் இறந்த உறவுகளை நினைவுகூர அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் , போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.