முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்றுமுன்தினம் (26) கைக்குண்டு ஒன்று வெடித்தது.
குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்றைய நாளில்(27) தடயவியல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்தோடு குறித்த பகுதியில் வேறு வெடி பொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூர் பகுதியில் தயாரிக்கப்பட்ட குண்டு எனவும் இந்தக் குண்டு அண்மையில் பளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மீட்கப்பட்ட குண்டுகளை ஒத்ததாக காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறான நிலையில் குறித்த குண்டுகள் எவ்வாறு இங்கு வந்தது என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை நேற்று (27) குறித்த பகுதியில் இருக்கின்ற வீடுகள் அனைத்திலும் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.