புலிகள் சார்பாக யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவி இளைஞர், யுவுதிகள் தவறான தலைமையின் வழிநடத்தல் காரணமாக உயிரிழந்த போதிலும் அவர்கள் எமது உறவுகள்.
இறந்தவர்களின் நினைவு தினங்களை நினைவு கூருவதற்கு அவர்களுடைய உறவுகளுக்கு இருக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இதை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் நானும் ஒருவன். இதனால்தான் எமது மக்கள் சந்தித்த அழிவுகளுக்கும் இழப்புக்களுக்கும் தார்மீக பொறுப்பை ஏற்று அவற்றிற்கு முடிந்தளவு பரிகாரம் காணும் நோக்கில் இன்றளவும் அரசியலில் நீடிக்கின்றேன்.
அந்தத் தார்மீகப் பொறுப்பின் காரணமாகவே, ஆயுதப் போராட்டம் காரணமாக உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களையும் நினைவு கூருவதற்கான பொது தினம் ஒன்றை சட்ட ரீதியாக உருவாக்க வேண்டும் என்பதற்காக, கடந்த ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் சிறப்பு பிரேரணை ஒன்றை கொண்டு வந்தேன்.
குறித்த பிரேரணைணை வழிமொழிவதற்கு மனமின்றி சபையில் இருந்த தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் அனைவரும் பறந்தோடி விட்டனர்.
இலங்கை – இந்திய ஒப்பந்ததின் பின்னரான காலப் பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் அனைத்தும் புலித் தலைமையின் தீர்க்கதரிசனமற்ற சுயநலன் சார்ந்த தீர்மானங்களின் காரணாமாக ஏற்பட்டவை என்பதே என்னுடைய கருத்து.
அந்த ஒப்பதம் உருவாக்கப்பட்ட போது தமது 652 உறுப்பினர்கள் உயிரிழந்ததாக புலிகள் இயக்கம் அறிவித்திருந்தது. இதுவரை உயிரிழந்த ஏனைய இயக்கங்களின் போராளிகள் பொதுமக்கள் அனைவரையும் சேர்த்து சுமார் 2000 உயிர்களை பறிகொடுத்திருந்தோம். ஆனால் அதற்கு பின்னர் வகைதொகையற்ற முறையில் பல்லாயிரம் உறவுகளை இழந்திருக்கின்றோம்.
எவ்வாறிருந்தாலும், புலிகள் சார்பாக யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவி இளைஞர், யுவுதிகள் தவறான தலைமையின் வழிநடத்தல் காரணமாக உயிரிழந்த போதிலும் அவர்கள் எமது உறவுகள். இறந்தவர்களின் நினைவு தினங்களை நினைவு கூருவதற்கு அவர்களுடைய உறவுகளுக்கு இருக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது.
ஆனால், புலிகளின் நினைவு தினத்தினை கொண்டாடுவோம் என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு அதுதொடர்பாக கதைப்பதற்கே அருகதை இல்லை என்பதையே நாடாளுமன்ற உரையில் வெளிப்படுத்தியிருந்தேன்.
தங்களுடைய உறுப்பினர்களும் தலைவர்களும் துரத்தி துரத்திக் கொலை செய்யப்பட்ட போது உயிர்ப் பயத்தில் ஓடியவர்கள், அதற்கு காரணமானவர்களை உணர்வுபூர்வமாக நினைவு கூருவார்கள் என்று நினைக்கின்றீர்களா?
2009 இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிந்தபோது, யுத்தத்தினை நிறுத்துவதற்கான முயற்சிகளில் பங்கெடுக்க விரும்பாமல் ஓடி ஒளிந்தவர்கள்தான் தற்போது வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள்.
அதிலும் அபத்தமான விடயம் என்னவென்றால் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தவறானது என்று சொல்லித் திரிகின்ற சுமந்திரன் புலிகள் சார்பில் 1985 ஆம் ஆண்டு உயிரிழந்த பண்டிதர் என்பரின் வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வைக்கின்றார்.
இவ்வாறானவர்கள் உண்மையில் உணர்வுபூர்வமாக செயற்படுகின்றார்கள் என்றால், தாங்கள் முண்டுகொடுத்துக் கொண்டிருந்த கடந்த ஆட்சிக்காலத்தில் பண்டிதரின் தாயாரின் 80 வயது மூதாட்டியை தேடிச் சென்று ஒரு அரசாங்க வீட்டுத் திட்டத்தினை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
அதனைச் செய்யத் தயாராக இல்லாதவர்கள் தற்போது அந்த மூதாட்டி வாழுகின்ற தகரக் கொட்டகைக்குள் சென்று விளக்கேற்றுகின்றார்கள் என்றால் வெறும் சுயலாப அரசியல் நோக்கமே அன்றி வேறெதுவும் இல்லை. அவ்வாறான செயற்பாடுகளைத்தான் நான் விமர்சிக்கின்றேன்.. அவ்வாறு பொய் வேஷம் போட்டு பாசாங்கு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை. அவ்வாறான மலினமான அரசியல்வாதி நான் இல்லை என்பதை எமது மக்கள் அறிவார்கள்.” என்றார்.


















