பாகிஸ்தானில் அண்மை காலமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருவதையடுத்து, பாலியல் குற்றவாளிகளிற்கு ஆண்மைநீக்கம் செய்யும் சட்டத்திற்கு நேற்று அங்கீகாரம் கிடைத்தது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு பிரதமர் இம்ரான் கான் அரசு தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்த புதிய சட்டம் பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்கவும், 4 மாதங்களில் விசாரணையை முடிக்கவும் வழிவகை செய்கிறது. மேலும் இந்த சட்டத்தின்படி பலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு இரசாயன முறையில் ஆண்மைத்தன்மையை நீக்கும் மருந்து கொடுக்கப்படும். இது தொடர்பான முடிவை அரசு நியமித்த மருத்துவர்கள் குழு தீர்மானிக்கும்.
இந்த நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி நேற்று ஒப்புதல் வழங்கினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவுபடுத்த இந்த அவசர சட்டம் உதவும். பாலியல் வல்லுறவு வழக்குகளை விரைவாக விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடுவது தடை செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.