மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையின் 34 ஆவது சபை அமர்வு இன்று தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்றது
ஆளும் கட்சி சார்பில் 11 உறுப்பினர்களும் எதிர்தரப்பில் 12 பேரும் அமர்வில் பங்கு பற்றியிருந்தனர். வழக்கம் போல் மௌன இறைவணக்கம் மற்றும் தவிசாளரின் தலைமை உரையுடன் அமர்வு நடைபெற்றது. இதன்போது தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு முன்பு சபை அமர்வில் அமர்ந்திருந்த எதிர்தரப்பினரை சேர்ந்த 4 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாது என தவிசாளரினால் தெரிவிக்கப்பட்ட போது சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.
இதேவேளை தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதனடிப்படையில், கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட உள்ளக வீதிகளை திருத்தம் செய்வதற்னான அனுமதி கோரல், பழுதடைந்த வீதி விளக்குகளை திருத்துவதற்கும், புதிய வீதி விளக்குகளை கொள்வனவு செய்து பொருத்துவதற்கான அனுமதி கோரல், அனர்த்த காலங்களில் தேவைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் நிவாரணங்கள் மற்றும் மானியங்கள் வழங்குவதற்கான தீர்மானத்தினை அங்கீகரித்தல்,
சபையினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தீர்மானத்தினை அங்கீகரித்தல், விசேட தேவையுடைய காலங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பொதுமக்களுக்கு, மாணவர்களுக்கு, முதியோர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கான தீர்மானத்தினை அங்கீகரித்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேவேளை கடந்த 11 ஆம் திகதி சபை அமர்வில் குழப்ப நிலை காரணமாக குழப்பத்தினை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் 4 உறுப்பினர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து சபை அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்றைய அமர்வில் குறித்த 4 உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர். இதேவேளை மேற்படி தீர்மானங்கள் கடந்தகால சபை அமர்வில் அனுமதி எடுப்பதற்கு முன்பே வேலைகள் யாவும் செய்து முடிவுற்றுள்ளதாகவும் குறித்த வேலைத்திட்டங்கள் சிலவற்றினை பாதீட்டினை நிறைவேற்றிக் கொள்ள பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள உறுப்பினர்கள் சிலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக எதிர்தரப்பினர் குற்றம் சுமத்துவதுடன் 4 உறுப்பினர்களுக்கும் போலியான குற்றச் சாட்டை சுமத்தி பாதீடு மற்றும் சில விசேட தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ள ஒழுக்காற்று நடவடிக்கை எனும் போர்வையில் இடைநிறுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்கள்.
இறுதியில் சபை மண்டபத்திற்கு முன்பு தங்களது எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு கலைந்து சென்றனர்.


















