திருச்சியில் வீடு புகுந்து திருட முயன்ற கேரள இளைஞர்களை விரட்டிப் பிடித்து கிராம மக்கள் தாக்கினர். இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.
திருச்சி ஜீயபுரம், அல்லூரில் வசித்துவருபவர் வெங்கடேசன். இவரது வீட்டில் நேற்று காலை இரண்டு திருடர்கள் சுவர் ஏறிக் குதித்து நுழைந்துள்ளனர். திருடர்களை கண்டதும் வெங்கடேசன், அதிர்ச்சியடைந்து சத்தம் போடத் தொடங்கியிருக்கிறார். சத்தம் போட்டால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய திருடர்கள் வெங்கடேசன், அவரது மனைவி ஆகியோரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.
அவர்கள் சத்தம் போட்டதும் கிராம மக்கள் ஒன்று திரண்டு இருவரையும் மடக்கிப்பிடிக்க முயன்றனர். அப்போது இருவரில் ஒருவன், தன் கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி, “என்னைப் பிடிப்பவர்களைக் கொலை செய்துவிடுவேன்“ என்று மிரட்டினான். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி இளைஞர்கள், கத்தியைத் தட்டிவிட்டு அவனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.
இந்தச் சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, இளைஞர்கள் தாக்கியதால் படுகாயமடைந்த திருடனை, அங்கிருந்த ஒரு மினி லாரியில் ஏற்றி திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, போலீஸார் முன்னிலையில் இளைஞர்கள் மீண்டும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்திய போலீஸார், திருடனைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து பொலிசார் தரப்பில் ்“கேரள மாநிலைத்தைச் சேர்ந்த தீபு, அரவிந்த் என்பவர்கள் இங்கு வேலை செய்துவந்திருக்கிறார்கள். தீபு என்ற இளைஞர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள மாங்காட்டுகரவர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவருடைய நண்பனான அரவிந்த், கிருஷ்ண கிருபா பகுதியைச் சேர்ந்த பாபுல்லேயன் எனபவரது மகன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இளைஞர்கள் தாக்கியதால் படுகாயமடைந்தவர்களை, திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தோம். இதில், தீபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது குறித்து அல்லூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றனர்.