பிறந்த வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்த காதல் மனைவியை விபச்சாரியாக சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர் கைது செய்யப்பட்டான்.
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்பவர் திருப்பதி அருகே உள்ள திம்மா நாயுடு பள்ளியை சேர்ந்த ரேவந்த். திருப்பதியை சேர்ந்த நிரோசா என்ற பெண்ணை காதலித்த ரேவந்த் நான்கு மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
நிரோஷாவின் பெற்றோர் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்தனர். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் தன்னுடைய சுயரூபத்தை வெளியில் காட்ட துவங்கிய ரேவந்த், கூடுதலாக மேலும் வரதட்சனை வாங்கி வருமாறு கேட்டு மனைவியை துன்புறுத்த தொடங்கினார்.
கணவனின் கோரிக்கையை மனைவி ஏற்க மறுத்த காரணத்தால் மனைவியை பழிவாங்க முடிவு செய்தார் ரேவந்த். இதற்காகத்தான் மனைவியுடன் தான் அந்தரங்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள், வீடியோ ஆகியவற்றை சமூக வலை தளத்தில் பதிவேற்றம் செய்த ரேவந்த், அதில் தன்னுடைய காதல் மனைவியை விபச்சாரி என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த பதிவில் மனைவியின் செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே பலரிடமிருந்தும் நிரோஷா விற்கு தொலைபேசி மூலம் அழைப்புகள் வர துவங்கின. இதனால் ஆவேசம் அடைந்த நிரோசா, கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த திருப்பதி எஸ்.பி.ரமேஷ் ரெட்டி, திருப்பதியில் உள்ள டிசா காவல் நிலையத்தில் ரேவந்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார். ரேவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.



















