சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையின் வரலாற்றிலேயே டெஸ்ட் பிரிவில் முதல்முறையாக நியூஸிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதையடுத்து, டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததோடு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அதிகமான புள்ளிகள் பிரிவில் முதலிடத்தையும் நியூஸிலாந்து பிடித்துள்ளது.
இதன் மூலம் லோட்ர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகளுக்கான போட்டியில் நியூஸிலாந்தும் இணைகிறது.
இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூஸிலாந்து அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடத்தில் அவுஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடனும், இந்திய அணி 114 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெறும் 6வது அணி நியூஸிலாந்தாகும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் 7வது அணி நியூஸிலாந்து. கடந்த 2 ஆண்டுகளாக அதிகபட்சமாக 2வது இடம் வரை நியூஸிலாந்து முன்னேறியது. ஆனால், முதலிடத்தை எட்டமுடியவில்லை.
106 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4வது இடத்திலும், தென்னாபிரிக்க அணி 96 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையிலும் இந்திய அணியின் கப்டன் விராட் கோலி, ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை முறியடித்து நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்ஸன் முதலிடத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்து.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தற்போது, அவுஸ்திரேலிய அணி 322 புள்ளிகளுடன், 0.767 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி 390 புள்ளிகளுடன் 0.722 சதவீதத்துடன் 2வது இடத்திலும் உள்ளன. நியூஸிலாந்து அணி 420 புள்ளிகளுடன் 0.70 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது.
இந்தியா, ஆஸி. அணிகளை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முறியடிக்க இன்னும் 2 சதவீதம் மட்டுேம நியூஸிலாந்துக்கு தேவை என்பதால், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளுக்கு இடையே வரும் நாட்களில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.