நான்கு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை 11 வருடங்களுக்கு இல்லாமல்போகுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அவரது குடியுரிமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனைக்காளாகியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குற்றவியல் குற்றத்துக்கு ஆளாகியதன் மூலம் அவரது சிறைத்தண்டனை 06 மாதங்கள் முடிவடைந்த பின்னர், அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகிவிடும். 6 மாதங்களுக்குள் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தால், அவரது பாராளுமன்ற ஆசனம் வெறுமையாகும்.
அவரது பாராளுமன்ற இடத்துக்கு பொதுத்தேர்தலில் அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளரை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடுவோம்.
அத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனையில் 06 மாத காலம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போவதுடன் அவரது குடியுரிமையும் இல்லாமல் போகிறது.
அதாவது, அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை காலமான 4 வருடங்கள் முடிவடைந்து, அவர் விடுதலையாகும் தினத்திலிருந்து 7 வருட காலங்களுக்கு அவரது குடியுரிமை இல்லாமலாகும். சிறையிலுள்ள 4 வருடங்களிலோ, அதற்கடுத்த 7 வருடங்ளிலோ அவர் வாக்களிக்கவோ, தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாமல் போகும் என்றார்.