புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ம் தேதி பிரான்சிஸ் கோவா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மெசியா (30), சாம்சான்டர்வின் (28), நாகராஜ் (52), செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது எல்லை தாண்டியதாக இவர்களின் விசைப்படகைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், தங்கள் கப்பலின் அருகில் நிறுத்தி வைத்துள்ளனர், கடல் சீற்றத்தால் அந்தப் படகின் பின்பகுதி இலங்கை கடற்படைக் கப்பலின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன், மாற்றுக் கப்பலைக் கொண்டு மீனவர்களின் படகைத் தாக்கி மூழ்கடித்துள்ளனர்.
படகிலிருந்த மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையில், கடந்த 20ம் தேதி இருவரின் உடல் இலங்கையில் கரை ஒதுங்கியதாகவும், அடுத்த நாள் மீதி இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும் இறந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர், அதில் அவர்களின் உடல்களில் காயங்கள் இருப்பதுபோல காணப்பட்டதால், இலங்கை கடற்படையினர் தாக்கியிருக்க கூடும் என கூறி, மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே கடந்த 23ம் தேதி இறந்த 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படையினர், இந்திய எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர், இதனை அடுத்து 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்திடம் சிக்கி உயிர்பிழைத்த மீனவர் சுரேஷ் குமார் தான் நிரபராதி என விடுவிக்கப்பட்ட பின்னரும் கையில் விலங்கிட்டு, தெருத்தெருவாக இழுத்துச் சென்றதாகவும், யாழ்ப்பாணம் சிறையில் உடல் ரீதியாக அடித்து சித்ரவதை செய்ததாக தமிழ் நாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றில் உருக்கமாக இதனைத் தெரிவித்துள்ளார்.