பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருக்கும் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று, புதுப்பித்தல் பணிகள் முடிவுற்று, பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோயிலின் நிர்வாக அதிகாரங்கள் உள்ளூரில் இருக்கும் ஓர் இந்து அமைப்புக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் நேற்று (ஜனவரி 29, சனிக்கிழமை) கூறினர்.
‘தி எவக்யூ டிரஸ்ட் பிராபர்டி போர்டு’ என்ற குழுவே, பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைப் பராமரித்து வருகிறது. பாகிஸ்தானில் சமீபத்திய காலத்தில் மட்டும் 12 கோயில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இந்தக் குழு கூறியுள்ளது.
“பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் 126 ஆண்டு கால சிவன் கோயில் புதுப்பிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கோயிலோடு அதிக அளவிலான நிலப்பரப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே கோயிலுக்கு வரும் இந்துக்கள் தங்கள் மதரீதியிலான சடங்குகளை மேற்கொள்ள முடியும்” என அந்த அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் அமிர் ஹஸ்மி பிடிஐ கூறியுள்ளார். அதோடு சிவன் கோயிலை நிர்வகிக்கும் பணி ஓர் உள்ளூர் இந்து அமைப்பிடம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்துக்கள் எளிதில் வந்து போகவும், தங்கள் மதரீதியிலான சடங்குகளை செய்யவும், கோயில் வளாகத்துக்குள் இருக்கும் நிலங்களையும், கோயிலுடன் இணைக்குமாறு எங்களது அறக்கட்டளையின் தலைவர் ஆமிர் அஹ்மத்திடம் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சைலா ராம் கோரிக்கை வைத்தார்” என ஹஸ்மி கூறினார்.
“இந்தக் கோயிலின் சுற்றுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால், நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் எல்லாம் மீட்டெடுக்கப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தச் சிவன் கோயில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் இந்துக்களுக்கு திறக்கப்பட இருக்கிறது” என ஹஸ்மி கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட கோயில்களில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட்டில் உள்ள 1,000 ஆண்டு பழமையான ஷவாலா தேஜா கோயிலும் ஒன்று எனக் கூறினார் ஹஸ்மி.
பெஷாவரில் உள்ள மற்ற இந்துமத கோயில்களிலும் புதுப்பித்தல் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இந்துக்கள் தான் பாகிஸ்தானிலேயே அதிக எண்ணிக்கையில் இருக்கும் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ தரவுகள் படி, பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இந்து சமூகத்தினர்களோ, 90 லட்சம் பேர் வாழ்வதாக நம்புகிறார்கள்.
பாகிஸ்தானில் பெரும்பாலான இந்துக்கள், இந்து மாகாணத்தில் வாழ்கின்றனர்
அதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்றளவும் தங்களது கலாசாரம், பண்பாட்டை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.