ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் ஒப்படைக்குமாறுகோரி, கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் மகஜரொன்றையும் மேற்படி ஒன்றியம் நேற்று கையளித்தது.
மகஜரை கையளித்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கலாநிதி குணதாச அமரசேகர உட்பட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கூறுகையில்,
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் எமது நாட்டு படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவையாகும். குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு முன்னர் அது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வழங்கவில்லை. ஒருதலைபட்சமாகவே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே, விளக்கமளிப்பதற்கு எமக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளோம். அது தொடர்பான காரணங்களை உள்ளடக்கிய மகஜரே கையளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகியுள்ளதால் புதிய யோசனை ஊடாக பொருளாதாரத்தடைக்கு முயற்சிக்கலாம். எதற்கும் அரசாங்கம் அஞ்சக்கூடாது. படையினர் மக்கள் நாடு நிற்கின்றது. உரிய பதிலை வழங்குவதற்கு எமக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.